பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா-சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின், பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்லும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உயர்மட்ட மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கும் போது, பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கும் மேலாக, இந்தியா-சீனா இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இந்த நிகழ்வின் பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடிக்கு சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சீனா பயணத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 30ஆம் தேதி, பிரதமர் மோடி ஜப்பான் செல்ல உள்ளார். அங்கு அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்புக் கூட்டம் நடத்தி முடித்த பின், சீனாவுக்குத் திருப்பி செல்கிறார்.