புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தயங்குவதாகவும், அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய நிதி விவகாரங்களை அமெரிக்கா விசாரித்து வருவதால், டிரம்பை நேரடியாக எதிர்க்க முடியாமல் உள்ளதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் தன்னுடைய தலையீட்டால் நிறுத்தப்பட்டது என டிரம்ப் தொடர்ந்து வாதாடி வரும் நிலையில், இந்திய அரசு அதை மறுக்கிறது. எனினும், பிரதமர் மோடி, டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “இந்தியாவிடம் எந்த உலகத் தலைவரும் கோரிக்கை விடுக்கவில்லை” என பதிலளித்திருந்தார்.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களின் பின்னணியில், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியை, இன்னும் 24 மணி நேரத்தில் உயர்த்தப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை எதிர்க்கும் வகையில் இந்திய அரசு எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்காததை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “மோடியால் டிரம்பை எதிர்த்து பேச முடியவில்லை” எனக்கூறி பதிவிட்டுள்ளார்.