மதுரையில் கைவினைப் பொருட்களை மேம்படுத்தும் விதமாக நடைபெற்று வரும் ‘காந்தி சில்ப் பஜார்’ 10 நாள் விற்பனைக் கண்காட்சியின் 4-ஆம் நாள் நிகழ்வில், தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தப் பயிற்சி மற்றும் கண்காட்சி முக்கியத்துவம் பெறுகிறது. மதுரையில் உள்ள “பெட்கிராட்” (Petcrat) நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கைவினைப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி, உள்ளூர் கலைஞர்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தங்கள் பொருட்களை நேரடியாகச் சந்தைப்படுத்த ஒரு தளமாக உள்ளது.
இந்தக் கண்காட்சியின் 4-ஆம் நாள் நிகழ்வை, “பெட்கிராட்” நிர்வாக இயக்குநர் எம். சுப்புராம் தலைமையில், மதுரை சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அவர், தொழில்முனைவோர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்தச் சான்றிதழ், பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் திறமை மற்றும் தொழில் தொடங்கும் ஆர்வத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சான்றிதழ் பெற்றவர்கள், இனிவரும் காலத்தில் சிறிய அளவிலான கைவினைத் தொழில்களைத் தொடங்கவும், கண்காட்சி போன்ற விற்பனை வாய்ப்புகளில் பங்கேற்கவும் ஊக்கமளிக்கப்பட்டுள்ளனர். பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதில் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களும், சேவை மையங்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இந்நிகழ்ச்சியில், நேதாஜி இயக்கத்தின் சுவாமிநாதன், சி.ஹெச்.சி.எல். (சி.எஸ்.ஆர்) சீனியர் அலுவலர் சுஜின், கைவினைப் பொருட்கள் நாகர்கோவில் சேவை மைய அலுவலர்களான லிசி, ராய், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், “பெட்கிராட்” அமைப்பின் நிர்வாகிகளான தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச் செயலாளர் அங்குச்சாமி, பொருளாளர் சாராள் ரூபி, துணைத் தலைவர் சுசிலா குணசீலி, ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, கண்ணன், கீர்த்திராஜ், ஜெயலட்சுமி மற்றும் பயிற்சியாளர்களான முத்துச்செல்வி, விஜயவள்ளி, சரஸ்வதி, தேன்மொழி உட்படப் பலரும் பங்கேற்றனர்.
