மொடக்குறிச்சியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து அமைச்சர் முத்துசாமி அதிரடி!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய முழுநேர நியாயவிலைக் கடையின் கட்டிடத்தை தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். கணபதிபாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கிளியம்பட்டி முழுநேர நியாயவிலைக் கடையில், டி.மேட்டுப்பாளையம், சீரங்கம்பாளையம், பெரளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,184 குடும்ப அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அத்தியாவசியப் பொருட்களுக்காக அலைந்து திரிய வேண்டிய சூழல் நிலவியது. மக்களின் இந்த நீண்டகால இன்னல்களைக் கருத்தில் கொண்டு, பயணத் தூரத்தைக் குறைத்துத் தங்கள் பகுதியிலேயே புதிய கடை அமைக்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமியிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, போர்க்கால அடிப்படையில் இந்தப் புதிய முழுநேர நியாயவிலைக் கடை உருவாக்கப்பட்டுள்ளது.

புதியதாகத் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடையின் மூலம் 505 குடும்ப அட்டைகளுக்கு இனி அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே அனைத்து வேலை நாட்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடையைத் திறந்து வைத்த கையோடு, குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான பொருட்களை அமைச்சர் நேரில் வழங்கினார். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது 913 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 340 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 1,253 கடைகள் மூலம் சுமார் 7.64 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த வரிசையில் புதியதாக இணைந்துள்ள இந்தக் கடை அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மாதேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Exit mobile version