தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் களைகட்டத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தியை கிராம கமிட்டியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளன்று (ஜனவரி 15) அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக கிராம பொது கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாய சங்கங்களுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. சமூகங்களுக்கு இடையிலான இந்த முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே முன்னின்று இந்தப் போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் போட்டிகளை நடத்த முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை வாடிவாசல் அருகே முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்துகொண்டு முகூர்த்தக்காலை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் அமைச்சர் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அங்கு திரண்ட அவனியாபுரம் கிராம கமிட்டியினர் திடீரென அமைச்சரை முற்றுகையிட்டனர்.
“நூற்றாண்டு காலப் பாரம்பரியமிக்க அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை அந்தந்த கிராம மக்களே நடத்துவதுதான் முறை. ஆனால், அரசு நிர்வாகம் இந்தப் போட்டியைத் தன் வசம் வைத்திருப்பது எங்களின் உரிமையைப் பறிக்கும் செயல்” என்று கூறி அவர்கள் அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு போட்டியைத் தங்களது கிராம கமிட்டியே முன்னின்று நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அமைச்சருக்கும் கிராம மக்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராமத்தினர் கலைந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “மதுரை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் எவ்வித ஜாதி, மத பாகுபாடின்றி மிகச் சிறப்பாக நடத்தப்படும். நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தர உள்ளனர். சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், டிராக்டர் போன்ற பிரம்மாண்டப் பரிசுகள் எப்போதும் போல வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் கீழக்கரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தைத் தொடர்ந்து, பாரம்பரிய வாடிவாசல்களில் நடைபெறும் போட்டிகளிலும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

















