தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவான விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது :
“கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிக்கும் ஸ்ரீசன் பார்மசிட்டிகல்ஸ் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நிறுவனம் மீது மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை இதுவரை ஒருமுறையும் ஆய்வு செய்யவில்லை. ஆனால் 2019 முதல் 2022 வரை மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஐந்து முறை ஆய்வு செய்துள்ளது. அப்போது அபராதமும் விதிக்கப்பட்டு, உற்பத்தி நிறுத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இருப்பினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் செய்யாத காரணத்தால் இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, விதிமுறைகளைப் பின்பற்றி அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது; நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் மொத்தம் 397 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அதில் திரவ நிலை மருந்து தயாரிக்கும் 50 நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வாரத்தில் கூடுதல் 52 நிறுவனங்கள் மீதும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
			















