கடலூர் :
விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தெரியாமல் புதிய கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிடுவதாக தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் மழையால் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது,” என கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “விவசாயத்தையும் விவசாயிகளையும் பற்றி எந்தத் தெளிவும் இல்லாமல் புதிய கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். பச்சை துண்டுகளை கட்டிக் கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுவது நகைச்சுவையாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து பேசும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்,” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இப்போது அறிக்கை வெளியிடும் தவெக தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கிருந்தார்? அந்தக் காலத்தில் மக்களோடு நின்றது திமுகவும் அதன் தொண்டர்களும் தான்,” என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்னர், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தொடர்மழையால் நெல்மணிகள் வீணாகி முளைப்பது போல திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு முளைத்து வளர்ந்து, ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது உறுதி” என்று தெரிவித்திருந்தார். மேலும், “விவசாயிகளை உண்மையாக அக்கறை கொண்ட அரசு என்றால், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பு கொடுத்து அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும்,” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
