தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் எந்தளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கம், துறைமுக மேம்பாடுகள், தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் சரக்கு ரயில் திட்டங்கள் என தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு நடத்தும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இதுவரை என்ன பயன் கிடைத்துள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை முதலீடுகள் வந்துள்ளன ? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன ? என்பதைக் கொண்டு ஒரு முழுமையான வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வளம் கொழிக்கும் தொழிலாக தற்போது சாராய ஆலைகள்தான் செயல்படுகின்றன எனக் கடுமையாக விமர்சித்த எல். முருகன், “திமுகவினர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
நாங்குநேரி தொழிற்பேட்டை, விருதுநகர் ஜவுளி பூங்கா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்புகளாகவே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.