அமைச்சர் ஐ. பெரியசாமி உடல்நலக் குறைவு – கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி

கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திடீரென உடல்நலக்குறைவால் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வயிற்று தொடர்பான சிரமம் காரணமாக அவர் மருத்துவர்களின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் கவனிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெரியசாமி, 1970களிலிருந்தே கட்சியில் செயற்பட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் வேரூன்றிய தலைவராக விளங்கும் அவர், பல முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 1996ஆம் ஆண்டு முதல் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த மாதம் அவரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருந்தாலும், அவர் வழக்கம்போல் கட்சி மற்றும் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

72 வயதான பெரியசாமி அவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ மருத்துவ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version