கரூர்: கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உறுதி
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நீதியரசர் அறிக்கை கிடைத்தவுடன், இனிமேல் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கான கடுமையான நெறிமுறைகள் வகுக்கப்படும் எனவும், வதந்திகளைப் பரப்பாமல் பொறுப்புடன் அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் வெளியிட்ட வீடியோ குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். “மக்களின் சந்தேகங்களை பதிவு செய்ததற்கே அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டப்படுகிறேன். ஒரே நபர் ஆணையம் என்பது கண்துடைப்பு. உண்மை வெளிவர சிபிஐ விசாரணை அவசியம்” என அவர் வலியுறுத்தினார்.
அன்பில் மகேஷ் பதில்
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “கரூர் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோதும் அன்றைய முதல்வர் பழனிசாமியே அமைத்தார். அப்போது அவரின் கண்கள் மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தை ஆராய்ந்த ஆறுமுகசாமி ஆணையமும் கண்துடைப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி தன்னை அவமதித்த விமர்சனத்திற்கு, “உயிரிழந்த 9 பிஞ்சுகளை நான் என் குழந்தைகளாக கருதுகிறேன். தந்தையை கூட கொச்சைப்படுத்தும் அன்புமணியின் கருத்தை பொருட்படுத்தப்போவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் ஆறுதல்
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல். முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “பிரதமர் வர இயலாததால், அவரின் அறிவுறுத்தலின்படி வந்தேன். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதவாறு நெறிமுறைகள் வகுக்கப்படும்” என தெரிவித்தார்.
பாஜக விசாரணைக் குழு
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர். விரைவில் இந்தக் குழு கரூர் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளது.