தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme – OPS) குறித்த விவாதம் மீண்டும் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சூழ்நிலையைப் பொறுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு வெறும் “தேர்தல் நாடகம்” என்றும், தோல்வி பயத்தில் அவர் பதற்றமடைவதையே இது காட்டுகிறது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது அறிக்கையில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் தனது அறிக்கையில், “2003-ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே சிதைத்து, ஓய்வூதியத் திட்டத்தைப் பறித்ததே அதிமுகதான். 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும், ஐந்து ஆண்டுகால ஆட்சியில் அதனை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி, இப்போது தேன் தடவிய வார்த்தைகளைப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள் போராடியபோது, அவர்கள் தனியார் நிறுவன ஊழியர்களை விட அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று விளம்பரம் கொடுத்துக் கொச்சைப்படுத்தியவர் இதே பழனிசாமிதான். இப்போது தேர்தல் நெருங்குவதால் அவர் போலிப் பாசத்தைக் கொட்டுகிறார்” என்று கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் (UPS), தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார்.
கணக்கீடு முறை: மத்திய அரசின் திட்டத்தில் கடைசி 12 மாத ஊதியத்தின் சராசரியே கணக்கில் கொள்ளப்படும். ஆனால், தமிழக அரசின் திட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, ஊழியர் கடைசியாகப் பெற்ற மாதத்தின் அடிப்படை ஊதியத்தில் 50% வழங்கப்படுகிறது.
குறைந்தபட்ச ஓய்வூதியம்: மத்திய அரசின் திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே ஓய்வூதியம் உண்டு. ஆனால், தமிழக அரசின் திட்டத்தில் பணிக்காலம் குறைவாக இருந்தாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு: இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசு முதற்கட்டமாக 13,000 கோடி ரூபாயும், ஆண்டுதோறும் கூடுதலாக 11,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.
“அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாளாம்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அமைச்சர், தங்களால் செய்ய முடியாத ஒன்றை திமுக அரசு சாதித்துக் காட்டியதால், அதனைப் பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறியுள்ளார். “அரசு ஊழியர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தேர்தல் நாடகத்தை அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்” என்று கூறி தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார். தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி முன்வைக்கும் இந்த வாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
