அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரளா சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கும் லியோனல் மெஸ்சி, அர்ஜென்டினாவை 2022 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுத் தந்தவர். இந்தியாவில், குறிப்பாக கேரளாவில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதற்காக கொச்சியில் உள்ள ஸ்டேடியம் ரூ.70 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பல வீரர்களும் வருவதாக கூறப்பட்டது.
ஆனால், போட்டியை ஸ்பான்சர் செய்த தனியார் நிறுவனம் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நவம்பரில் நடைபெறவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்ட புதிய சுற்றுப்பயண அட்டவணையிலும் கேரளா சுற்றுப்பயணம் இடம்பெறவில்லை. மெஸ்சி தலைமையிலான அணி நவம்பர் மாதத்தில் பயிற்சிக்காக ஸ்பெயினில் தங்கி, நவம்பர் 14-ம் தேதி அங்கோலாவுக்கு எதிராக லுவாண்டாவில் நட்புறவு போட்டியில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் மெஸ்சியை நேரில் காண ஆவலுடன் காத்திருந்த கேரளா ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
