அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தன்னுடைய சொந்த மண்ணில் இறுதி ஃபேர்வெல் ஆட்டத்தை விளையாடவிருப்பதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உலக கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மதிக்கப்படும் மெஸ்ஸி, பந்தைக் கட்டுப்படுத்தும் திறமை, அதிரடி ட்ரிபிளிங் மற்றும் அபாரமான கோல் அடிக்கும் திறனுக்காக உலகளவில் ரசிகர்களைக் குவித்துள்ளார். சிறுவயதில் ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், விடாமுயற்சியால் கால்பந்து உலகில் சிறந்த வீரனாக உயர்ந்தார்.
பல ஆண்டுகளாக உலகக்கோப்பை கனவைத் தேடிய மெஸ்ஸி, 2022-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவிற்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கோப்பையை வென்று தனது கனவை நிறைவேற்றினார்.
சொந்த மண்ணில் கடைசி தகுதிச்சுற்று
2026 உலகக்கோப்பை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
அர்ஜென்டினா அணி, அக்டோபர் 11 அன்று நடைபெறும் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெனிசுலாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி தான் தனது சொந்த மண்ணில் கடைசி தகுதிச்சுற்று ஆட்டமாக இருக்கும் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
“இந்தப் போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. ஏனெனில் இது கடைசி தகுதிச்சுற்றுப் போட்டி. எதிர்காலத்தில் நட்பு ஆட்டங்களிலோ, வேறு போட்டிகளிலோ இங்கே விளையாட வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை. எனவே என் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தில் என்னுடன் இருப்பார்கள்,” என மெஸ்ஸி உருக்கமாக கூறினார்.
ஓய்வை நோக்கி
தற்போது 38 வயதான மெஸ்ஸி, 2026 உலகக்கோப்பைக்கு பின் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது சொந்த மண்ணில் நடைபெறும் இந்த இறுதி தகுதிச்சுற்றுப் போட்டியை காண ரசிகர்கள் திரண்டுவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வரவேற்பு காரணமாக டிக்கெட் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.