வந்தாரா வனவிலங்குகள் மையத்தில் மெஸ்ஸி ; சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என பெயர் சூட்டல்

உலக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, இந்தியா வருகையின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ‘வந்தாரா’ வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார். ரிலையன்ஸ் குழுமம் சார்பில் அனந்த் அம்பானி முன்னெடுத்துள்ள இந்த மையத்தில், மெஸ்ஸிக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரம்பரிய இசை, மலர் மாலைகள், ஆரத்தி மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளுடன் மெஸ்ஸி உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அவருடன் இன்டர் மியாமி அணியின் வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் உள்ளிட்டோரும் வந்தாரா மையத்திற்கு வருகை தந்தனர்.

வந்தாரா வளாகத்தில் சிங்கம், யானை, ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மெஸ்ஸி நேரில் பார்வையிட்டார். விலங்குகளுக்கு உணவு அளித்து, அவற்றுடன் நேரம் செலவிட்ட மெஸ்ஸி, வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை ஆர்வத்துடன் கவனித்தார்.

மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில், மையத்தில் உள்ள ஒரு சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என்று பெயர் சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. மேலும், வந்தாராவில் உள்ள மணிக்லால் என்ற குட்டி யானையுடன் மெஸ்ஸி நீண்ட நேரம் பழகியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு முன்பாக, வந்தாராவில் நடைபெற்ற பாரம்பரிய இந்து மதச் சடங்குகளிலும் மெஸ்ஸி பங்கேற்றார். அம்பே மாதா பூஜை, கணேஷ் பூஜை, ஹனுமான் பூஜை மற்றும் சிவ அபிஷேகம் ஆகியவற்றில் அவர் கலந்து கொண்டார். நாட்டுப்புற இசை மற்றும் மலர் தூவலுடன் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வந்தாரா குறித்து பேசிய மெஸ்ஸி, “இங்கு நடைபெறும் விலங்குகளுக்கான பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மீட்கப்பட்ட விலங்குகள் பெறும் பராமரிப்பும் பாதுகாப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. இங்கு கழித்த நேரம் எங்களுக்கு மனநிறைவை அளித்தது. இந்த அனுபவம் என்றும் நினைவில் இருக்கும். இப்படியான அர்த்தமுள்ள பணிகளுக்கு ஆதரவு அளிப்பதை தொடர விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Exit mobile version