தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரைப் பிரதானப்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அதிரடிப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகி இமயம் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள், பேருந்து நிலையத்திற்குள் வந்த அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மாநிலத்தின் பெயர் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற நீண்டகாலக் குற்றச்சாட்டை முன்வைத்து இந்த நூதனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது, ஆளுங்கட்சியான தி.மு.க. அரசை மிகக் கடுமையாகக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பெயர் பதிக்க வேண்டியது மாநிலத் தன்னாட்சியின் அடையாளம் என்றும், அதனைச் செய்யத் தவறியது கண்டனத்திற்குரியது என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா (KSRTC) மற்றும் கர்நாடகா (KSRTC) போன்ற மாநிலங்கள் தங்களது அரசுப் பேருந்துகளில் மாநிலத்தின் பெயரைத் தெளிவாகப் பொறித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ‘TNSTC’ என்ற ஆங்கிலச் சுருக்கத்தையும், குறிப்பிட்ட மண்டலப் பெயர்களையும் மட்டுமே பயன்படுத்துவது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பிரபாகரன், குமரேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பேருந்து நிலையத்தின் பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. “எங்கள் நிலத்தின் பெயரான ‘தமிழ்நாடு’ என்பதைப் பேருந்துகளில் பொறிக்க அரசு தயங்குவது ஏன்? உடனடியாக அனைத்து அரசுப் பேருந்துகளிலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ எனத் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும், இல்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்” என மாநில நிர்வாகி இமயம் எச்சரிக்கை விடுத்தார். இச்சம்பவம் தேனி நகரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

















