பிரதமர்மோடி எடப்பாடியார் பங்கேற்ற மெகாகூட்டணி பொதுக்கூட்டம் டாக்டர் சரவணன் தலைமையில் உற்சாக வரவேற்பு!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாகக் கருதப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், நேற்று மாலை மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள திடலில் கடல் அலை எனத் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அகில இந்திய மற்றும் மாநிலத் தலைவர்கள் மதுரையில் சங்கமித்தனர்.

நேற்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் நேரில் சென்று பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து, நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள சிந்தாமணி சிக்னல் அருகேயுள்ள ஜிஆர்டி ஹோட்டல் முன்பாக, டாக்டர் பா. சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நின்று எடப்பாடியாருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் அதிர, “வருங்கால முதலமைச்சரே” என முழக்கமிட்டவாறு இளைஞர்கள் வரவேற்புப் பதாகைகளை ஏந்தி நின்றனர். எடப்பாடி பழனிசாமி அவர்களின் வாகனம் ஹோட்டல் பகுதியை நெருங்கியபோது, தொண்டர்கள் மலர்களைத் தூவித் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்த வரவேற்பு நிகழ்வில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று மதுரையை அதிமுக கோட்டையாக மாற்றிக் காட்டினர். விமான நிலையம் முதல் பொதுக்கூட்ட மைதானம் வரை வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகளும், கொடிக்கம்பங்களும் மதுரையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை உறுதி செய்தன. மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடியார் ஒரே மேடையில் தோன்றி ஆற்றிய உரைகள், வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version