ஈரோடு மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தது. அந்த கூட்டத்தில் பேசிய விஜய், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைய உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், தவெக கட்சியின் எதிர்கால வியூகம் மற்றும் கூட்டணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “பொங்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடக்கவுள்ள அரசியல் மாற்றத்தை அனைவரும் காண்பீர்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “ஈரோட்டில் நடைபெற்ற விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சுமார் 3.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அது வரலாற்று சிறப்பு மிக்க கூட்டமாக அமைந்தது. இன்று மாலை கட்சித் தலைவர் விஜய்யுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அந்த ஆலோசனையின் பின்னர் அடுத்த கூட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் விஜய்தான் எடுப்பார். பொங்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளன. பிற கட்சிகளைச் சேர்ந்த பலரும் விரைவில் தவெகவில் இணைவார்கள்” என அவர் தெரிவித்தார்.
















