இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஓவலில் நடைபெற உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுக்குச் செல்ல உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கிரிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தொடரை சமன்செய்யும் நோக்கில் 5வது டெஸ்ட்டில் வெற்றிபெற முயற்சிக்கவுள்ளது.
வேகத்தில் குறைவு – பும்ராவின் ஓய்வு :
2024-25 பார்டர் கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு பும்ரா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இருமுறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியபோதும், இந்திய அணி வெற்றிபெற முடியவில்லை.
மாந்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்டில், 31 ஓவர்கள் வீசி 103 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே பெற்ற பும்ரா, தன்னுடைய டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும், அவரது பந்துவீச்சு வேகம் கணிசமாகக் குறைந்ததற்கும் கவனம் திரும்பியுள்ளது. ஹெடிங்லியில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்துகள் 42.7% இருந்த நிலையில், லார்ட்ஸில் 22.3% ஆகவும், மான்செஸ்டரில் 0.5% ஆகவும் குறைந்திருந்தன.
இந்த நிலையில், அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மருத்துவக்குழு பும்ராவுக்கு ஓய்வு தேவை என பரிந்துரை செய்துள்ளதால், அவர் இறுதிப் போட்டியில் நீக்கம் செய்யப்பட உள்ளார்.
ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு :
4வது டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த ஆகாஷ் தீப்பை, பும்ராவுக்குப் பதிலாக அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் உள்ளனர்; அணியின் காம்பினேஷன் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை” என 4வது போட்டிக்குப் பிறகு தெரிவித்திருந்தார்.