பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீராடியதால் பாவச் சுமை கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி தன் பாவச்சுமை நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், சிவபெருமான் கங்கையிடம் மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி விமோசனம் பெற வரம் அருளியதாகவும் ஐதீகம். இந்த ஐதீக திருவிழாவை முன்னிட்டு ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வருடம் தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா உற்சவ தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். குறிப்பாக ஐப்பசி மாதம் முப்பதாம் நாள் நடைபெறும் துலா உற்சவ கடை முக தீர்த்தவாரியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தீர்த்தவாரியின் போது ஒரே நேரத்தில் புனித நீராடுவார்கள். இந்த உற்சவத்தில் கடைசி பத்து நாள் உற்சவமானது இன்று மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கோயில் கொடிமரத்தில் ரிஷப கோடியை ஏற்றி வைத்து கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு பல்வேறு திருக்கோயில்களில் இருந்து தினசரி சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரண்டு கரைகளிலும் எழுந்தருள செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.
