மயிலாடுதுறையில் பிரபல துணிக்கடையில் அதிரடி ஆஃபர் காரணமாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள்; கூட்ட நெரிசல் அதிகரித்ததன் காரணமாக கடை உள்புறமாக மூடப்பட்டதால், கடைக்கு வெளியில் நின்ற மக்கள் ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இரண்டு கிளைகளுடன் இயங்கி வந்த இக்கடையின் ஒரு கிளை வியாபாரம் இல்லாத காரணத்தால் அண்மையில் மூடப்பட்டது. நிலையில் மற்றொரு கடையையும் விரைவில் மூடுவதற்கு கடை நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் அந்த கடையில் எந்த பொருளை எடுத்தாலும் ரூ.100 மட்டுமே என அதிரடி ஆஃபர் விளம்பர பலகை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு பொதுமக்கள் ஏராளமானோர் கடையில் குவிந்ததால் கடையில் உள்ளே நெரிசல் ஏற்பட்டது. நெருசலே தவிர்க்க கடையை உள்புறமாக பூட்டிய கடை நிர்வாகத்தினர், அவர்களை வெளியில் அனுப்பிய பின்னர் வெளியில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு ஆடை ரூ.100க்கு கிடைத்ததால் உள்ளே சென்ற யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் வர தயாராக இல்லை. இதனால் வெளியில் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் அமைதி இழந்தனர். கடையின் ஷட்டரை திறக்கச் சொல்லி ஷட்டரில் வேகமாக கையால் அடித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் டிஸ்கவுண்ட் ஆஃபர் அறிவிப்பு பலகையை ஒருவர் அங்கிருந்து அகற்ற முயன்றார். அவரிடம் வெளியில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவிப்பு பலகை அதே இடத்தில் வைக்கப்பட்டது. உள்ளே சென்றவர்கள் எப்போது வெளியில் வருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மீண்டும் கடையில் முன்பு காத்திருக்க தொடங்கினர். இதனால் ஒரு வழிச்சாலையான பட்டமங்கல தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
