மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்தார். இப்பள்ளி மாணவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 38 பேர் தங்கப்பதக்கத்தையும், 581 பேர் வெள்ளி பதக்கத்தையும், 59 மாணவர்கள் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதில், குத்துசண்டை, வாள்வீச்சு போன்ற புதிய விளையாட்டில் வெற்றி பெற்று மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஹாக்கி போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் முதன்முறையாக மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கால்பந்து, மேசைப்பந்து, கேரம், வளைப்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம், கராத்தே போன்ற போட்டிகளிலும் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகள்;, உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகச் செயலர் பாஸ்கரன், பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
