மயிலாடுதுறை மாவட்டம் புறநகர் பகுதியான டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் மணிகண்டன் விஜயா தம்பதி ஆகியோர் கடந்த 22ஆம் தேதி வெளியூர் சென்று இருந்த நிலையில் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 21 சவரன் தங்க நகையை இரும்பு லாக்கருடன் தூக்கிச் சென்றனர். மேலும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குற்ற செயலில் ஈடுபட்டது மயிலாடுதுறை நலத்துக்குடியைச் சார்ந்த சண்முகம் என்கின்ற மணிகண்டன் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் என்பது தெரியவந்தது. அவர்கள் மறைவான இடத்தில் லாக்கரை உடைத்து அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இருவரையும் 48 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக வழக்கு விசாரணையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஸ்டாலின், நேரில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

















