ஹாங்காங்கின் டாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற 32 மாடிக் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பேரழிவுத் தீவிபத்து, தொடர்ந்து மனித இழப்புகளைக் ஏற்படுத்தி வருகிறது. விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 279 பேர் மாயமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2,000 வீடுகளை கொண்ட இந்த உயர்மாடிக் குடியிருப்பில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கட்டிடத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக வேகமாகப் பரவியது. அங்கிருந்து தீ அடுத்துள்ள ஏழு கட்டிடங்களுக்கு பரவியதால், நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்த பயங்கரமான சூழ்நிலையை முன்னிட்டு ஹாங்காங் நிர்வாகம் மிகவும் கடுமையான அவசரகால நிலையான ‘லெவல்–5’ அபாய எச்சரிக்கையை அறிவித்து, பெருந்தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்துக்குப் பிறகு, தொடர்ந்து தீ அணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
தீயில் சிக்கி மரணமடைந்த 44 பேருக்கு அப்புறம், 45 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான 279 பேரின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை; அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில், இந்த தீவிபத்திற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ ஏற்பட்டு பரவிய முறைகள், பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவைகளை மையமாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் சமீப காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு தீவிபத்தாக இது கருதப்படுகிறது.
