மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வரம்பியம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தா வயது 32.இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை மாத்துரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரும் அமிர்தாவும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 26.06.2025-ல் வரம்பியத்தில் உள்ள அமிர்தா வீட்டில் சஞ்சய் குமாருக்கும் அமிர்தாவிற்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அப்போது 27.08.2025 அன்று எட்டுக்குடி முருகன் கோவிலில் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் விடுமுறைக்காக மாத்தூருக்கு சஞ்சய் குமார் சென்ற நிலையில் நேற்று அவரை அவரது சித்தப்பா முருகன் என்பவர் அங்கு வந்து கீழ் சாதி பெண்ணை நீ எப்படி திருமணம் செய்ய ஒப்புக் கொள்வாய் என கூறி அவரை கட்டையால் தாக்கி கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து அமிர்தாவின் அண்ணன் கண்ணன் திருத்துறைப் பூண்டடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராமநாதபுரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சஞ்சய் குமாரை மீட்டு திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சய் குமார் அமிர்தா இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த நிலையில் அவர்களுக்கு திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் நடக்கவிருந்த முதல் நாள் சாதியை காரணம் காட்டி சொந்த சித்தப்பாவால் மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் அதையும் மீறி காவல் துறையினர் அவரை கண்டுபிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் என்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version