சென்னை: பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று பெருமை சேர்த்தது. இதில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றினார்.
இந்த வெற்றிக்குப் பின்னர் கார்த்திகாவுக்கு வாழ்த்துக்கள் மழை பொழிகிறது. அதில் சமீபத்தில் பைசன் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் நேரிலேயே சென்று கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
‘வாழை’ படத்திற்கு பின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படம், தூத்துக்குடி வீரர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
இப்படம் வெளியான பின், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் பாராட்டினார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக பைசன் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
கண்ணகி நகர் வீராங்கனைக்கு பைசன் குழுவின் பரிசு!
இந்த வெற்றித் தொடரின் உற்சாகம் அடங்காமல் இருக்கும் நிலையில், தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை மாரி செல்வராஜ் அவர்களின் குழுவினர் நேரில் சென்று பாராட்டினர். நீலம் ஸ்டுடியோஸ், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், மற்றும் பைசன் படக்குழு சார்பாக மாரி செல்வராஜ், கார்த்திகாவுக்கு ₹5 லட்சம் மற்றும் கண்ணகி நகர் கபடிக்குழுவுக்கு ₹5 லட்சம் என மொத்தம் ₹10 லட்சம் ஊக்கத்தொகை காசோலையை வழங்கினார்.
கார்த்திகா இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக விளங்கிய இவர், இறுதிப் போட்டியில் ஈரானை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இதற்குமுன் தமிழக அரசு சார்பில் ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ₹5 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இப்போது பைசன் படக்குழுவின் ₹10 லட்சம் ஊக்கத்தொகை, கார்த்திகாவின் சாதனையை மேலும் ஒளிரச் செய்துள்ளது.
 
			















