பக்கவாதம் (Stroke) குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் நடைபெற்ற பெரும் அளவிலான மாரத்தான் போட்டி, நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உற்சாக ஓட்டத்தால் சிறப்பாக நிறைவு பெற்றது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு ஓட்டம், “நேரம் இழக்காதீர்கள் மூளையை காப்பாற்றுங்கள் (Save Brain, Act Fast)” என்ற கோஷத்துடன் காலை நேரம் 6.00 மணிக்கு தொடங்கியது. பக்கவாதத்தின் அறிகுறிகளை விரைவில் கண்டறிந்து உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி அணிகள் இணைந்து இதில் பங்கேற்றன. இதில் நத்தம் அரசு கலைக்கல்லூரி மாணவர் மணிகண்டன் (முதலாம் ஆண்டு) சிறப்பாக ஓடி ஒன்பதாம் இடத்தை பிடித்தார். அவரது சாதனைக்காக கல்லூரி முதல்வர் ராஜாராம், விளையாட்டுத் துறை பொறுப்பாளர் நாராயணன், மற்றும் பல பேராசிரியர்கள் இணைந்து அவரை பாராட்டினர். “இந்த மாரத்தான் எனக்கு வெறும் ஓட்டப் போட்டி அல்ல; உடல்நலனுக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் நான் ஓடியேன். பக்கவாதம் குறித்து என் குடும்பத்திலும், நண்பர்களிடமும் விழிப்புணர்வை பரப்புவேன்,” என்றார்.
மாரத்தான் வழித்தடங்களில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பக்கவாத அறிகுறிகள் குறித்த விளக்கப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ‘Act F.A.S.T.’ (Face drooping, Arm weakness, Speech difficulty, Time to call emergency) குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பெண்கள் மற்றும் முதியோர்கள் பிரிவிலும் தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
சரவணம்பட்டியில் நடந்த இந்த பக்கவாத விழிப்புணர்வு மாரத்தான், உடல்நலம் மற்றும் சமூக பொறுப்புணர்வை இணைக்கும் சிறந்த முயற்சியாக பாராட்டப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் ஒவ்வொரு நகரிலும் நடை பெற வேண்டுமென மருத்துவ வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன

















