மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இரு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் (18), மற்றும் அவரது நண்பரான ஆகாஷ் (18) ஆகிய இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுற்றி வந்தனர். அப்போது, அதே வகுப்பைச் சேர்ந்த முத்துச்செல்வம், அருண், மதார், மதுசூதனன், சுந்தர் உள்ளிட்ட சில மாணவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் செல்வது தவறு என்று கூறியுள்ளனர். இது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமாக உருவெடுத்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் லட்சுமி நாராயணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல, மற்றொரு தரப்பில் முத்துச்செல்வம் என்ற மாணவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஆய்வாளர் விமலன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சமூக மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு மறு தேதி அறிவிக்கப்படும் வரை காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version