மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா ஸம்ப்ரோஷனம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா ஸம்ப்ரோஷனம் விமர்சையாக நடைபெற்றது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயம் தென்னகத்து தெட்சிண துவாரகை என்றும், குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. 23 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து காணும் இவ்வாலயத்தில் மிக பிரமாண்ட ராஜகோபுரம் உள்ளிட்ட 16 கோபுரங்கள் மற்றும் மூலவர் ராஜகோபாலசுவாமி, தாயார் செங்கமலத்தாயார் சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி உள்ளிட்ட 24 சன்னதிகளும், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட 7 பிரமாண்ட மண்டபங்கள், 3 பிரகாரங்கள், 9 புனித தீர்த்தங்கள் முதலானவை இவ்வாலயத்தின் தொன்மை சிறப்பை வெளிப்படுத்துகின்றன. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயம் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யும் வகையில் சுமார் ரூ.16 கோடி செலவில் திருப்பணி வேலைகள் கடந்த ஓராண்டுகாலமாக நடைபெற்று வந்தன. ஆலய திருப்பணி வேலைகளை முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.ராஜா மேற்பார்வையில் ஆலய அறங்காவலர் இளவரசன் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சிறப்பாக செய்துமுடித்தனர். திருப்பணி வேலைகள் நிறைவடைந்த நிலையில் ஆலயத்தின் மஹா ஸம்ப்ரோஷனத்தையொட்டி ஆலயத்தில் 3500 சதுரடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு யாகவேள்வி பூஜை மேற்கொள்ள ஏதுவாக 30க்கும் மேற்பட்ட யாகவேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 26ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி இன்று காலை 5ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாஹ_தி தீபாராதனையுடன் நிறைவடைந்தன. இதில் 80க்கும் மேற்பட்ட தீட்சதர்கள் பங்கேற்று யாகவேள்வியினை நடத்தினர். இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு முதல் கட்டமாக காலை 10.15 மணிக்கு ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள் உள்ளிட்ட கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி மஹா ஸம்ப்ரோஷனம் எனும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமாக மூலவர் பெருமாள், தாயார் விமான கலசங்களுக்கு காலை 11 மணிக்கு மஹா ஸம்ப்ரோஷனம் எனும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சன்னதிகளில் அருள்பாலிக்கும் மூலவர் பெருமாள், தாயார், முதலான அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவின்பேரில் நூற்றுக்கணக்கான காவலர்;கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினரும் கும்பாபிஷேக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Exit mobile version