திருச்சி: தொட்டியம் அருகே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாயிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி சவிதா மகள் ரக்ஷிதா உடன் வீட்டில் இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, சவிதாவிடம் நகைகளை கேட்டு மிரட்டினார்.
அச்சமடைந்த சவிதா அணிந்திருந்த 4 சவரன் தாலிசெயின் மற்றும் 1 சவரன் தோடு ஆகியவற்றை கழற்றி கொடுத்தார். நகைகளை பறித்த மர்ம நபர் உடனே தப்பி ஓடினார்.
இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொக்கு வெட்டியான் கோவில் அருகே பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் நாச்சியார் புதூரைச் சேர்ந்த அருண்குமார் (30) என தெரியவந்தது. சவிதாவிடம் நகைகளை பறித்ததும் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் அருண்குமாரை கைது செய்து, பறிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.