மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா, காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
மதிமுக தலைவர் வைகோவுடன் நீண்டநாள் பயணித்த மல்லை சத்யா, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்தவர். ஆனால், வைகோவின் மகன் துரை வைகோவின் செல்வாக்கு அதிகரித்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்த அவர், வாரிசு அரசியலை எதிர்த்து கட்சிக்குள் குரல் கொடுத்தார். இதனால், வைகோ மற்றும் சத்யா இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
வைகோ எடுத்த முக்கிய முடிவுகளை சத்யா திறம்பட விமர்சித்ததுடன், உட்கட்சியில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என உண்ணாவிரதம் கூட இருந்தார். இதையடுத்து, அவரை முதலில் தற்காலிகமாகவும், பின்னர் செப்டம்பர் 8 ஆம் தேதி நிரந்தரமாகவும் கட்சியிலிருந்து நீக்குவதாக வைகோ அறிவித்தார்.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, “ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்” என சத்யா கூறியிருந்தார். அதன்படி, நேற்று காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், ‘பொடா’ செவந்தியப்பன், ‘பொடா’ அழகுசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசின சத்யாவின் ஆதரவாளர் வல்லம் பஷீர், “மல்லை சத்யா தொடங்கும் புதிய கட்சி அல்லது அமைப்பின் பெயர் நவம்பர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
அதே நேரத்தில், விழாவில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் “திராவிட குடியரசு விடுதலைக் கழகம்” என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இதன் அடிப்படையில், அந்த பெயரே புதிய கட்சிப் பெயராக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.