மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுகவில், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் பொதுச் செயலாளர் வைகோவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
வைகோ தம்மை துரோகி என்று குறிப்பிட்டதாகக் கூறி அதிருப்தியடைந்த மல்லை சத்யா, சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், கட்சிக்கு விரோதமாகவும் சட்ட விதிகளுக்கு முரணாகவும் மல்லை சத்யா செயல்பட்டதாகக் கூறி, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார்.
15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மதிமுக உடமைகள் மற்றும் ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் மல்லை சத்யாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.