ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில் சிவபுரம் இராஜராஜேஸ்வரம் கடம்பத்தூர் – பேரம்பாக்கம் – தக்கோலம் செல்லும் வழியில் பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முதலாம் இராசேந்திர சோழரின் 12 ம் ஆட்சி ஆண்டு வரை உரோகடம் என்றும் 13 ம் ஆட்சி ஆண்டு முதல் சிவபுரம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது
இவ்வூரில் உள்ள சிவாலயம் முழுவதும் கருங்கற்களால் அமைந்த ஒரு தள விமான அமைப்பையும் கொண்டது இந்த சிவாலயம் சோழ மாமன்னர் முதலாம் இராசராசன் ஆட்சியின் போது இத்திருக்கோயில் புதியதாகவோ கட்டப்பட்டுள்ளது
முதலாம் இராசேந்திர சோழரின் எட்டாவது ஆட்சியாண்டில் இராசேந்திர சோழரே இரண்டு நுந்தா விளக்கு எரிக்க 180 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளார்.

நாரயணன் செல்வன் என்பவரின் மனைவி வாசவி ஒரு நுந்த விளக்கு எரிக்க கொடுத்த 96 ஆடுகளையும் பெற்றுக்கொண்ட சிவபண்டாரிகள் விளக்கெரிக்க நெய்யை தினமும் இக்கோவிலுக்கே கொண்டு வந்து தருவதாய் கூறி ஒப்புக்கொண்ட தகவல்களையும் கல்வெட்டுகள் கூறுகின்றன
சிவபுரத்து இராஜராஜேஸ்வரத்து இறைவனுக்கு இராசேந்திர சோழரே அணிகலன்களை தானமளித்த செய்தியை கூறுகின்றது அந்த ஆபரணங்களின் பெயர் மற்றும் அதன் எடை அதில் பதிக்க பட்ட கற்களின் வகை போன்றவையும் விளக்கப்பட்டுள்ள அந்த கல்வெட்டில் ஆபரணங்களின் பெயர்களுக்கும் இராசேந்திர சோழரின் பெயரே சூட்டப்பட்டது.
மேலும் இவரின் பதினாறாவது ஆட்சியாண்டில் இராஜராஜேஸ்வரமுடையார் கோவிலிருந்து நூறு கழஞ்சு பொன்னைப் பெற்று அதற்க்கு வட்டியாக 166 கலம் இரு தூணி நெல் கொடுப்பதாகவும் சம்மதிக்ப்பட்ட நிகழ்வையும் கல்வெட்டுகள் கூறுகின்றன
இந்த தலத்திற்கு அண்மையில் தான் நரசிங்கபுரம், திருஇலம்பையங் கோட்டுர், திருவிற்கோலம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் உள்ளன.
இக்கோவிலின் புறச்சுவர் முழுவதும் மேல் சுவர்முதல் அடிச்சுவர் வரை கல்வெட்டுகளாகவே நிரம்பி உள்ளன.

கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர்.அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நந்தி மண்டபத்தில் சிறிய நந்தி சிற்பம் அமைந்துள்ளது. திருச்சுற்றின் பரிவாரத் தெய்வங்களாக தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடமேற்கில் சண்டேசுவரரும் உள்ளனர். கோபுரங்கள் இங்கு இல்லை. சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.
1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழன் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. சிவபுரம் சோழர்காலத்தில் உரோகடம் என்றழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் தாங்குதளம் முதல் கலசம் வரை முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ள இக்கற்றளி வேசர பாணியில் அமைந்துள்ளது.
இங்குள்ள இறைவனை இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர் என்று இக்கோயில் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. கூவம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் தோண்டி இக்கோயிலின் பயன்பாட்டிற்காக நீர் கொண்டு வரப்பட்ட செய்தியை இங்குள்ள ஒரு கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
சதுர வடிவ கருவறையில் லிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். கருவறையைத் தொடர்ந்து தென்வடலாக நீண்ட அர்த்தமண்டபமும், அதனைத் தொடர்ந்து சோழர்காலத் தூண்களுடன் விளங்கும் முகமண்டமும் அமைந்துள்ளது.
கருவறையின் வெளிப்புறச் சுற்றின் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் முறையே தெற்கில் தென்முகக்கடவுளான ஆலமர்ச் செல்வனும், மேற்கே அண்ணாமலையராகிய இலிங்கோத்பவரும், வடக்கில் நான்முகனான பிரம்மனும் காட்சியளிக்கின்றனர்.
அர்த்தமண்டப வெளிப்புறச் சுவர் கோட்டங்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் விஷ்ணு துர்க்கை நின்ற நிலையிலும் அருள்பாலிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் மரபுச்சின்னமாக விளங்குகிறது.
நித்திய பூஜைகள் ஊர்மக்களால் நடத்தப்பெறுகின்றன. பிரதோஷம், சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி முதலிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.