மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற முத்தாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற முத்தாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்:- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாடு தெருவில் பிரசித்தி பெற்ற முத்தாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அயோத்தியில் இருந்து குடிபெயர்ந்த பட்டாரியர்கள் மயிலாடுதுறையில் மேலநாஞ்சில்நாட்டில் தங்கி, தங்கள் குலதெய்வமான முத்தாட்சியம்மனுக்கு இங்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினமான இன்று காலை, 4-ஆம் கால யாகசாலை பூஜை, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்று மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றிவந்து, கோயில் விமானத்தை அடைந்தனர். அங்கு மேளவாத்தியங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

Exit mobile version