“அகிம்சைச் சுடருக்கு மதுரை அஞ்சலி”: காந்தி மியூசியத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுதிமொழி

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தில் (காந்தி மியூசியம்) காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி மற்றும் ஒருமைப்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. மதுரையின் ஆன்மாவோடு கலந்திருக்கும் காந்தி மியூசியத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லமணி தலைமையில், 5–ம் பகுதி சர்க்கிள் தலைவரும் 31-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலருமான தல்லாகுளம் முருகன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியின் தியாகத்தையும், அவர் வலியுறுத்திய அகிம்சைப் பாதையையும் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

முன்னதாக, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நல்லமணி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் நூர்முகமது ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், மாநில நிர்வாகி வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், செய்யதுபாபு மற்றும் வீரவாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து, தொண்டர்களிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினர். உறுதிமொழி ஏற்பின் போது, சாதி, மத பேதமின்றி இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க அனைவரும் பாடுபடுவோம் என சூளுரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சமாதி பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அங்கு மலரஞ்சலி செலுத்தி மீண்டும் ஒருமுறை உறுதியினைப் புதுப்பித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டு காந்தியின் நினைவுகளைப் போற்றினர். மதுரையில் காந்தி தனது ஆடையைத் துறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில், அவரது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்து மரியாதை செலுத்தியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

Exit mobile version