சென்னை: பிரபல கேட்டரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலா சார்பில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல சமையல் கலைஞரும், கேட்டரிங் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பாக ஜாய் கிரிசில்டா முன்வைத்த குற்றச்சாட்டுகள் சமீப மாதங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. 2023ஆம் ஆண்டு ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், கர்ப்பிணியாக இருந்தபோதும் விலகியதாகவும் அவர் புகார் அளித்திருந்தார். இதுகுறித்த புகார் காவல்துறை மற்றும் மகளிர் ஆணையத்தில் விசாரணையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா வெளியிட்ட சமூக வலைதள பதிவுகள் நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் சார்பில் அவதூறு மற்றும் வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் வரை ரூ.11.21 கோடி மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியதாகவும், கிரிசில்டா பதிந்த பதிவுகளை நீக்க உத்தரவு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
கிரிசில்டா தரப்பு, “நிறுவனம் குறித்து எந்தவித குற்றச்சாட்டோ, வணிகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான பதிவோ இணையத்தில் வெளியிடப்படவில்லை. கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறும் நிலையில் எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை” என்று வாதித்தது.
இரு தரப்பின் முன்வைப்புகளையும் பரிசீலித்த நீதிபதி என். செந்தில்குமார், மனுதாரர் கோரிய தடை உத்தரவிற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று கருத்து தெரிவித்தார். இதன் பேரில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் மனு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவுடன், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக தொடரப்பட்ட சிவில் வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.

















