பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஏமாற்றியதாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், 2019 ஆம் ஆண்டு ‘மெஹந்தி சர்கஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர் ரங்கராஜ். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. இதற்கிடையில், அவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து வருவதாக சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.
ஜாய் கிரிஸில்டா, பல திரை பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைத்தவர். அவர் 2018 ஆம் ஆண்டு பொன் மகள் வந்தாள் திரைப்பட இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை திருமணம் செய்தார். ஆனால் 2023-ல் இவர்களது பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு, மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் ஆன புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா, தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார். இதனால், “முதல் மனைவியிடம் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் நடத்தலாமா?” என்ற விவாதம் இணையத்தில் வைரலானது.
ஆனால் சமீபத்தில் ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்திருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஜாய் கிரிஸில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்” என குற்றம்சாட்டி, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த புகார் விவகாரம் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.