மயிலாடுதுறையில் மூடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாததால் M.L.A மீண்டும் ஆய்வு

மயிலாடுதுறையில் மூடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இன்று திறக்க வாய்ப்புள்ளதாக மயிலாடுதுறை எம்எல்ஏ தெரிவித்திருந்த நிலையில் பாலம் திறக்கப்படாததால் எம்எல்ஏ மீண்டும் ஆய்வு. ரயில்வே துறைக்கு உட்பட்ட மேம்பாலத்தின் நடைபாலத்தை சரிசெய்ய நிதி கோரப்படாத நிலையில் நெடுஞ்சாலைத்துறையினரே நடைபாதையை சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்;-

மயிலாடுதுறை காவேரி நகரில் 50 ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலத்தின் மேல்பகுதியில் ஓடுதளத்தில் உள்ள இணைப்புகளை சீரமைக்கும் பணிக்காக அக்.3-ஆம் தேதி முதல் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கல்லணை மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டது. 3 மாதங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்திருந்த நிலையில், முன்னதாக திறக்க வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, மேம்பாலத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்த மயிலாடுதுறை எம்எல்ஏ டிச.25-க்குள்ளாக பாலம் பொதமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், பாலத்தில் பணிகள் நிறைவடையாததால் எம்எல்ஏ எஸ்.ராஜகுமார், ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இன்று மீண்டும் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே துறை சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை பகுதி பொறியாளர் அமர்நாத், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோட்டப் பொறியாளர் மணிசுந்தரம், உள்ளிட்டோர் இந்த கூட்டாய்வில் பங்கேற்றனர். ஆய்வில், மேம்பாலத்தின் இரு ஓரங்களில் உள்ள நடைபாதைக்கு இதுவரை நிதி கோரப்படாதது தெரியவந்தது. ரயில்வே கட்டுப்பாட்டில்வரும் நடைபாதைக்கு இதற்கு பின்னர் நிதிகேட்டு முன்மொழிவு அனுப்பி, நிதியை பெற காலதாமதம் ஆகும் என்பதாலும், மழைநீர் வடிவதற்கு நடைபாதை உடைக்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகளுக்கு மாநில அரசிடமிருந்து நிதிபெற்று சரி செய்து கொள்ள வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வின் முடிவில் எம்எல்ஏ தெரிவித்தார். இதனால், பாலம் திறப்பதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Exit mobile version