பயணிகள் நெரிசல் அதிகம் கொண்ட வழித்தடங்களில் சாமானிய மக்களும் நவீன வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தியோதயா ரயில்கள், இன்று நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பயணமாக மாறியுள்ளன. ‘அந்தியோதயா’ என்ற இந்திச் சொல்லுக்குத் தமிழில் ‘ஏழைகளின் எழுச்சி’ அல்லது ‘கடைநிலையானவர்களின் உயர்வு’ என்று பொருள், அந்தப் பெயருக்கு ஏற்றார் போலவே முற்றிலும் முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் சேவை, தென்தமிழக பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில், தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை, பயணிகளின் அமோக வரவேற்பைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி முதல் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்திய அளவில் இயக்கப்படும் பத்து அந்தியோதயா ரயில்களில், நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான இந்த ரயில் மட்டுமே தினசரி இயக்கப்படும் ஒரே சேவையாகத் திகழ்வது இதன் சிறப்பம்சமாகும். மற்ற வழித்தடங்களான கொச்சுவேலி – மங்களூரு (வாரம் மூன்று முறை), எர்ணாகுளம் – ஹவுரா மற்றும் சென்னை – சந்த்ராகாச்சி போன்ற ரயில்கள் வாராந்திர அடிப்படையிலேயே இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் மொத்தம் 22 முன்பதிவில்லாத நவீன எல்.எச்.பி (LHB) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களை விட இதில் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அதற்கேற்றார் போல ரயிலின் உள்ளே எல்.இ.டி திரைகள் மூலம் ரயில் நிலையங்கள் மற்றும் வேகம் குறித்த அறிவிப்புகள், பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள், தேநீர் மற்றும் காபி வழங்கும் இயந்திரங்கள், நவீன பயோ-கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் ஒவ்வொரு இருக்கைக்கும் அருகில் கைபேசி சார்ஜ் செய்யும் புள்ளிகள் என சொகுசு ரயில்களுக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் இருந்து மாலை கிளம்பி அதிகாலையில் சென்னை சென்றடையும் இந்த ரயில், அவசரத் தேவைக்காகப் பயணிப்பவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அநியாயக் கட்டணம் வசூலிக்கும் சூழலில், குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்தை இந்த அந்தியோதயா உறுதி செய்கிறது. தெற்கு ரயில்வேயின் மிக முக்கியமான வருவாய் ஈட்டும் ரயில்களில் ஒன்றாக இது உருவெடுத்துள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளை இணைக்கவும், பராமரிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்பதிவு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு எப்போதுமே கை கொடுக்கும் இந்த ‘ஏழைகளின் ஏசி இல்லாத சொகுசு ரயில்’, தமிழக ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக நீடிக்கிறது.














