சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த வழக்கில், நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் வீடுகளில் இன்று அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
மூல தகவல்களின்படி, பூடான் மற்றும் நேபாளம் வழியாக லேண்ட் குரூசர், டிஃபென்டர், மசெராட்டி உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள கார்களை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்து பதிவு செய்வதில் ஒரு கும்பல் ஈடுபட்டிருந்தது. கோயம்புத்தூரை தளமாகக் கொண்ட அந்த குழு, இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க தூதரகம் வழங்கியதாகக் கூறப்படும் போலி ஆவணங்களை பயன்படுத்தி, வாகனங்களை குறைந்த விலையில் சில பிரபலங்களுக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, சொகுசு கார் கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி முறைகேடு தொடர்பாக, ED இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 17 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் வீடுகள் உட்பட, கோயம்புத்தூர், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் உள்ள வாகன வணிகர்கள், பட்டறைகள் மற்றும் வாகன உரிமையாளர்களின் இல்லங்களும் அடங்குகின்றன.
முன்னதாக சுங்கத்துறை சோதனையில், துல்கர் சல்மானுக்குச் சொந்தமான லேண்ட் ரோவர் உட்பட பல பிரபலங்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து துல்கர் சல்மான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோதனை குறித்து இரு நடிகர்களிடமும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. எனினும், இந்த நடவடிக்கை மலையாளத் திரைத்துறையையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.