விபத்தையும் வென்ற காதல் : மருத்துவமனையில் மணமகளுக்கு தாலி கட்டிய இளைஞர் !

திருமண நாள் அதிகாலையிலேயே ஏற்பட்ட விபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், மணமகன் காட்டிய உறுதியும் உண்மையான அன்பும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷரோன் மற்றும் ஆலப்புழாவைச் சேர்ந்த அவனி ஆகியோரின் திருமணம் நவம்பர் 21, 2025 அன்று நடைபெற இருந்தது.

அன்றே அலங்காரத்திற்குச் செல்லும் வழியில் அவனி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், அவருக்கு முதுகெலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ICU-வுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் அவனி சிகிச்சையில் இருந்தாலும், மணமகனும் இரு குடும்பத்தினரும் திருமண நாளை மாற்ற வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அனுமதியுடன், அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் சுருக்கமான திருமணச் சடங்கை நடத்த ஒப்புதல் அளித்தது. அதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஷரோன் ICU படுக்கையில் படுத்திருந்த அவனிக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார்.

இந்த உணர்ச்சி பொங்கும் தருணம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் இதை “உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டு” எனவும், சிலர் பாலிவுட் திரைப்படமான விவாஹ் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும் சம்பவம் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version