அரியலூர் அருகே விபத்தில் சிக்கிய லாரி.. வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட லாரி விபத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர், திருச்சி குடோனில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்று அரியலூரில் உள்ள டீலரிடம் ஒப்படைக்கச் சென்றுள்ளார். வாரணவாசி அருகே உள்ள பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் ஏற்பட்ட அதிர்ச்சியால் சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியதால், லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. லாரி ஓட்டுநர் கனகராஜ் காயமடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள் காரணமாக வானளாவிய தீப்பிழம்புகள் எழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

தீ பரவியதால் தஞ்சாவூர்–திருச்சி வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையான வி.கைகாட்டி வழியாக இயக்கப்படுகின்றன. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். சுமார் அரை கிலோமீட்டர் சுற்றளவுக்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அருகில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லாரியில் இருந்த சிலிண்டர்கள் பல திசைகளில் சிதறியதால், அவற்றின் மீது தண்ணீர் பீசி தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அதிகாலை முதலே ஏற்பட்ட இந்த விபத்தால் வாரணவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்ற நிலை தொடர்கிறது.

Exit mobile version