மதுரை :
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல கட்சிகளைச் சேர்ந்தோர் மரியாதை செலுத்தினர்.
அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன்போது நடந்த ஒரு நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மரியாதை செலுத்திய பின், புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகள் “தேவர் வாழ்க” என முழங்காமல், “தவெக வாழ்க” என கோஷமிட்டனர். இதனால் அங்கு இருந்த ஜெயந்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். “தேவருக்கு மரியாதை செலுத்த வந்தபோது, கட்சியின் பெயரை முழங்குவது மரியாதைக்கேற்றதல்ல” என அவர்கள் கூறியதாக தகவல்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுப்புடன் புஸ்ஸி ஆனந்த் அணியை “கீழே இறங்குங்கள்” எனக் கேட்டுள்ளனர் என்றும், இது அங்கு சில நிமிடங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜயின் கூட்டங்களில் “TVK… TVK…” என்ற முழக்கங்கள் வழக்கமாக ஒலிக்கின்றன. தற்போது அந்த முழக்கங்கள் விஜய் இல்லாத இடங்களிலும், பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில், சர்வதேச யூடியூபர் ‘Speed’ உடன் எடுத்த வீடியோவிலும் இதேபோல் “TVK… TVK…” முழக்கமிட்டதற்கு விமர்சனங்கள் எழுந்திருந்தன. அந்த சர்ச்சைக்கு பிறகு இப்போது தேவர் ஜெயந்தியிலும் அதே சம்பவம் நிகழ்ந்திருப்பது மீண்டும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

















