மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டு பழமையான பாலத்தின் இணைப்பு சாலை கனமழை காரணமாக துண்டிப்பு; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலையூர் கிராமத்தில் நத்தம்-ஆறுபாதி கிராமங்களை இணைக்கும் வகையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டு அதனை முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் திறந்து வைத்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த பாலத்தினை பூம்புகார் சாலையிலிருந்து தரங்கம்பாடி சாலையில் உள்ள அலுவலகங்கள் கல்லூரிகள் பள்ளிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக கன மழை பெய்தது.
மேலும் காவிரி ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்த பாலத்தின் இணைப்புச் சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியது. இதன் காரணமாக இந்த மார்க்கத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக அந்த இணைப்பு சாலையை சரி செய்ய வேண்டும் மேலும் 70 ஆண்டுகள் பழமையான அந்த பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
