ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் ஏற்பட்ட சமயத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு 50 சதவீதம் வரை குறைந்தது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியின் கேட்சை பிடிக்க டைவ் அடித்தபோது, ஐயர் பலத்த காயமடைந்தார். அந்த தருணத்தில் அவருக்கு முழுமையான மயக்கம் ஏற்பட்டு, சுமார் 10 நிமிடங்கள் வரை உணர்விழந்திருந்ததாகவும், நின்றிருக்க கூட முடியாத நிலையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயத்தின் தாக்கத்தால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் உடனடியாக சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், முழுமையான குணமடைந்த நிலைக்கு வர இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமும் தேர்வுக்குழுவும், ஐயரை விரைவாக மீண்டும் களமிறக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளன. இதனால் வரும் நவம்பர் 30 முதல் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் (ராஞ்சி, ராய்ப்பூர், விசாகப்பட்டினம்) போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நாண்டு வரை 49.60 சராசரியில் 496 ரன்கள் குவித்து, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக விளங்கும் ஐயர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் களமிறங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

















