சென்னை :
வறுமைச் சூழலில் வாழும் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கண்டிப்பாக வர வேண்டும்; ஏக்கம், கனவுகள் என்பவற்றிலேயே காலம் கழிந்து போக அனுமதிக்கக் கூடாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அரசியல் பயணத்தின் நோக்கமும் மக்களுக்கான அர்ப்பணிப்பும் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
அந்த அறிக்கையில், “என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்து வரும் மக்களுக்கு என் அன்பான வணக்கம். அவர்கள் அளித்து வரும் அளவிட முடியாத ஆதரவும் பாசமும் தான் எனக்கு தொடர்ந்தும் செயல்படத் தேவையான பெரும் சக்தியாக உள்ளது” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகள் ஆட்சி செய்தாலும், இன்னும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாழ்க்கையில் உண்மையான விடியல் ஏற்பட வேண்டும் என்றும், அதற்காகவே மக்களுடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பல தடைகள் வந்ததாகவும், சில மக்களுக்கு தெரிந்தவையாகவும், பல மறைவான சவால்களாகவும் அவை இருந்ததாக விஜய் கூறியுள்ளார். எனினும், மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அந்த அனைத்து தடைகளையும் தாண்ட உதவியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், டிசம்பர் 18-ஆம் தேதி மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற மக்கள்சந்திப்பு, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் மக்கள் வெளிப்படுத்திய அன்பும் ஆதரவும் தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த காவல்துறையினருக்கும் அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
“மீண்டும் சந்திப்போம். வெற்றி நிச்சயம்” என தனது அறிக்கையை விஜய் முடித்துள்ளார்.
