கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் கழித்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்தார். பின்னர், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு அனுமதி கோரிக்கை அனுப்பப்பட்டது. அதற்கான பதிலாக, டிஜிபி அலுவலகம் சம்பந்தப்பட்ட எஸ்.பி.யிடம் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருநெல்வேலி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது :
“தமிழகத்தில் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள். பல கட்சிகள் ஒரே குடையின் கீழ் வர உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள்மீதே வழக்குகள் பதிவு செய்வதே இன்றைய அரசின் பழக்கமாகிவிட்டது.
தற்போது மாநிலம் முழுவதும் 283 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் 10க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு பிரதமர் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதில்லை,” என்றார்.
மேலும், “விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்த இடத்தில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு விஜய் உயிர் பாதுகாப்புக்காக காவல்துறையிடம் மனு செய்திருக்கிறார்,” எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.