மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அறிவுசார் சமூகத்தை உருவாக்கவும் தேசிய புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி இன்று (ஜனவரி 6, 2026) தொடங்கியது.
இவ்விழாவினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஸ்டாலின் குமார் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்து, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு தலைப்பிலான நூல்களைப் பார்வையிட்டார். பின்னர் மாணவ, மாணவிகளிடையே உரையாற்றிய அவர், “நூலகங்களே ஒரு மனிதனின் சிறந்த வழிகாட்டிகள். இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்கள் எளிதாகக் கிடைத்தாலும், புத்தகங்களை வாசிப்பதன் மூலம் கிடைக்கும் ஆழமான அறிவும், சிந்தனைத் தெளிவும் ஈடு இணையற்றது. மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவு மற்றும் இலக்கிய நூல்களை வாசித்து, தங்கள் ஆளுமைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ‘வாசிப்போம் யோசிப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். புத்தகங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்வியலை மாற்றியமைக்கின்றன என்பதையும், உலக வரலாற்றில் சிறந்த தலைவர்கள் உருவானதற்கு வாசிப்பு எவ்வாறு அடித்தளமாக இருந்தது என்பதையும் அவர் உதாரணங்களுடன் விளக்கினார். இது மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக, கல்லூரி முதல்வர் அருணாசலம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் ராஜதுரை தொடக்க உரை மற்றும் அறிமுக உரையை ஆற்றினார். இக்கண்காட்சியில் வரலாறு, அறிவியல், இலக்கியம், போட்டித் தேர்விற்கான கையேடுகள் மற்றும் சுய முன்னேற்ற நூல்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கல்லூரியின் பல்வேறு துறைப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புத்தகத் திருவிழா, அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
