மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழ்கடல் அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, “பழமையான பூம்புகாரின் வளமும் பெருமையும் வெளிப்பட செய்ய வேண்டும்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2025–26ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இந்தப் பணிகளை பேராசிரியர் கே. ராஜன் தலைமையிலான நிபுணர் குழுவும், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் உட்பட வல்லுநர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “கீழடி ஆய்வுகள் பழந்தமிழரின் வாழ்க்கையை வெளிக்காட்டியதைப் போலவே, பூம்புகார் அகழாய்வு தமிழக பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் முயற்சியாக அமைகிறது. முதலமைச்சரின் பாரம்பரியப் பாதுகாப்பு முயற்சிக்கு இது சிறந்த உதாரணம்” எனக் குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின், “கீழடி நம் தாய்மடியாக இருந்தது; இரும்புக் கால தொன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக, வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையையும் வெளிக்கொணர்வோம்” என வலியுறுத்தியுள்ளார்.
















