“மதுரை மண்ணில் மலரட்டும் எடப்பாடியார் ஆட்சி”: வாக்குறுதிகளுடன் களமிறங்கிய செல்லூர் ராஜூ

மதுரை மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்லும் மாபெரும் பரப்புரை இயக்கம் இன்று மதுரையில் எழுச்சியுடன் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அதிமுகவின் 5 பிரதான வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கித் தனது தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி அமையவும், எடப்பாடியார் தலைமையில் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடரவும் இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் பேராதரவு வழங்க வேண்டும்” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

அதிமுக வெளியிட்டுள்ள இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில், குறிப்பாகக் குடும்பத் தலைவிகள் அனைவருக்குமே மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், வீடற்ற ஏழை எளிய மக்களுக்குச் சொந்தமாகக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், பணிக்குச் செல்லும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செல்லூர் ராஜூ பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார். அத்துடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இந்தப் பரப்புரையில் முக்கிய இடம்பிடித்தது.

இந்த எழுச்சியான பரப்புரை நிகழ்வில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், பா. குமார், ஜெயவேல், எஸ். எஸ். சரவணன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், உசிலை பேராசிரியர் ஜெயபால், அண்ணா நகர் முருகன், கருப்புசாமி, எஸ்.எம்.டி. ரவி, வி.பி.ஆர். செல்வகுமார் உள்ளிட்ட மாவட்ட, பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். முனிச்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற அதிமுகவினர், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, எடப்பாடியாரின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று உறுதி அளித்தனர். செல்லூர் ராஜூவின் இந்த அதிரடித் தொடக்கம் மதுரையின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version