நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு வனச்சரகத்தில், அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வனத்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட உயிலட்டி பரலோரை மலைச்சரிவு பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த அதிகாரிகள், அங்குள்ள பாறைகளின் இடுக்குகளில் சோதனை செய்தனர்.
பாறைகளின் இடுக்கில் சுமார் 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உடல் சிதைந்து, அழுகிய நிலையில் காணப்பட்டது. சிறுத்தை இறந்து சில நாட்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்துத் தகவலறிந்த உயர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சிறுத்தையின் மரணம் இயற்கையானதா அல்லது ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்: சிறுத்தையின் உடலில் நகங்கள், பற்கள் மற்றும் தோல் ஆகியவை சிதைக்கப்பட்டுள்ளதா அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டதா என ஆய்வு செய்யப்பட உள்ளது. உணவு அல்லது எல்லைப் தகராறு காரணமாக மற்றொரு சிறுத்தையுடனான மோதலில் காயம் அடைந்து உயிரிழந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே உடற்கூறாய்வு (Post-mortem) செய்யப்பட்டு, அதன் உள்ளுறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளன. பரிசோதனை முடிவுக்குப் பின்னரே சிறுத்தை உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும். கோத்தகிரி பகுதிகளில் அண்மைக்காலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சிறுத்தையின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















